Wednesday 22 February, 2012

சென்னை-மாவட்டங்களில் மின்தடை செய்யும் நேரம் எது.. பட்டியல் போடும் மின்வாரிய அதிகாரிகள்


சென்னை: சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் எந்த நேரத்தில் மின்வெட்டை அமல்படுத்தலாம் என்பது குறித்து பட்டியல் போடப்பட்டு வருகிறதாம். இது முடிந்தவுடன் அரசின் ஒப்புதல் பெற்று அது அமல்படுத்தப்படும் என்று தெரிகிறது.

தமிழகத்தில் வரலாறு காணாத மின்பற்றாக்குறையும், மின்வெட்டும் மக்களை ஆட்டிப்படைத்து வருகிறது. அம்மிக்கல்லை நோக்கி மக்களை கொண்டு சென்று கொண்டிருக்கிறார்கள். மிக்ஸி, கிரைண்டர், பிரிட்ஜ் உள்ளிட்டவற்றை மக்கள் காட்சிப் பொருளாக வேடிக்கை பார்க்கும் நிலைக்குக் கொண்டு சென்று விட்டனர்.

தலைநகர் சென்னையில் தற்போது ஒரு மணி நேர மின்தடையே அமலில் உள்ளது. அதேசமயம், சென்னை தவிர்த்த பிற தமிழகப் பகுதிகளில் பல மணி நேர மின் தடை மக்களை ஆட்டிப்படைத்து வருகிறது.

இந்த நிலையில் சென்னைக்கு மட்டும் ஒரு மணி நேரம்தானா என்று மற்ற மாவட்ட மக்கள் முனுமுனுக்க ஆரம்பித்துள்ளனர். இதைத் தொடர்ந்து அங்கும் மின்தடையை கூடுதலாக்க திட்டமிட்டுள்ளனர். இதுதொடர்பாக சமீபத்தில் முதல்வர் ஜெயலலிதா, மின்வாரிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இதையடுத்து சென்னைக்கான மின்வெட்டை 3 மணி நேரமாக அதிகரிக்கவும், பிற மாவட்டங்களில் 6 மணி நேரமாக குறைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தொழிற்சாலைகளுக்கு கூடுதலாக ஒரு நாள் மின் விடுமுறையை அறிவிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னையிலும், பிற மாவட்டங்களிலும் எந்த நேரத்தில் மின்தடையை அமல்படுத்தலாம் என்பது குறித்த பட்டியல் தற்போது தயாரிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து மின்தடை நேரம் விரைவில் விரிவாக அறிவிக்கப்படும்.

சென்னையில் பகலில் 2 மணி நேரமும், இரவில் ஒரு மணி நேரமும் மின்தடை இருக்கும் என்று தெரிகிறது. அதேசமயம், பிற மாவட்டங்களில் பகலில் 4 மணி நேரமும், இரவில் 2 மணி நேரமும் இந்த மின் தடை இருக்கலாம்.

No comments:

Post a Comment